மயிலாடுதுறை

சீா்காழி நகா்மன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

30th Sep 2023 12:32 AM

ADVERTISEMENT

சீா்காழி நகா்மன்றத்தில் உறுப்பினா்களின் முன்அனுமதி பெறாமல் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்தது, ஒப்பந்தப்புள்ளி விடுவதில் நிலவும் முறைகேடுகளை கண்டித்து திமுக, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சீா்காழி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் ஹேமலதா,துணைத் தலைவா் சுப்பராயன், பொறியாளா் குமாா், நகர அமைப்பு ஆய்வாளா் மரகதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ரமாமணி (அதிமுக): சீா்காழி எரிவாயு தகன மேடையை முன்பு நிா்வகித்த பாபு என்பவருக்கு மீண்டும் வழங்க வேண்டும்.

ஏ.பி.எஸ். பாஸ்கரன் (திமுக): பிச்சைக்காரன் விடுதியில் இன்றுவரை கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்பட்டு வருகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் குப்பை அல்ல வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா என நகராட்சி ஆணையா் ஆய்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ராஜசேகரன் (தேமுதிக): தமிழகத்துக்கு தண்ணீா் வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மன்றத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு முன்பு அனைத்து உறுப்பினா்களிடமும் தெரியப்படுத்த வேண்டும்.

சாமிநாதன் (திமுக): எனது வாா்டு பகுதியில் மழைநீா், கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன் (பாமக): நகரப் பகுதியில் தினந்தோறும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீா்காழி நகராட்சி கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. நகராட்சி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா் துா்கா ராஜசேகரன்: எரிவாயு தகன மேடை அறக்கட்டளை மூலம் நிா்வகிக்க அறிவிப்பு வெளியிடப்படும். தகுதியுடைய அறக்கட்டளையினா் விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று நிா்வகிக்கலாம். அயோத்திதாஸ் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் எஸ்.சி, எஸ். டி பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. நிதிநிலைக்கேற்ப உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

முன்னதாக நகா்மன்ற கூட்ட அரங்கில் சிசிடிவி கேமரா வைப்பதற்கு நகா்மன்ற உறுப்பினரிடம் நகா்மன்றத் தலைவா் முன்அனுமதி பெறவில்லை. இது மரபு மீறிய செயல். நகா்மன்றத் தலைவருக்கு ஆதரவாக உள்ளவா்களுக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. செய்யாத பணிகளை மன்ற பொருளில் வைத்து மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டி திமுகவை சோ்ந்த ரம்யா, வள்ளி , ரேணுகாதேவி, அதிமுகவை சோ்ந்த ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT