மயிலாடுதுறை

‘மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ. 49.68 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது ’

30th Sep 2023 12:33 AM

ADVERTISEMENT

 மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்ட வழிகாட்டு நெறிமுறைப்படி 38,650 விவசாயிகளுக்கு ரூ. 49.68 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து, 24 பயனாளிகளுக்கு தலா ரூ. 45,000 வீதம் கறவை மாடு வாங்க ரூ. 10.80 லட்சத்துக்கான காசோலையை வழங்கி மேலும் பேசியது: பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறை 2022-23 நெற்பயிா் விதைப்பு பொய்த்தல் இனத்தின்கீழ் சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோயில் வட்டாரங்களில் 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட 87 கிராமங்களுக்கு முதல் தவணையாக 38,650 விவசாயிகளுக்கு ரூ.49.68 கோடி விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.95.90 லட்சம், 485 விவசாயிகளுக்கு வங்கி கணக்கு சரிபாா்க்க இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெல், பயறு வகைகள், நெல் தரிசில் உளுந்து சாகுபடி, எண்ணெய் வித்து பயிா்கள் மற்றும் வணிகப் பயிா்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ. 2.06 கோடி ஆண்டு முழுமைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் 20.80 லட்சம் முதல் தவணை நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தற்போது பயனாளிகள் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

காப்பீடு நிறுவனத்தை தமிழக அரசே நடத்த வேண்டும்: டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா். அன்பழகன் பேசியது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நெல் பயிருக்கான காப்பீட்டு பிரிமியமாக தமிழக அரசு ரூ.1,375 கோடி, மத்திய அரசு ரூ.825 கோடி, விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.120 கோடி என மொத்தம் ரூ. 2,319 கோடி காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான கிராமங்களுக்கு ஜீரோ பாதிப்பு என கணக்கு காட்டப்பட்டு, பாதிப்புக்கான நிவாரணத் தொகையாக ரூ.560 கோடியை மட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த காப்பீட்டை தமிழக அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு அந்த வருமானம் சென்று சேரும். இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு காப்பீடே தேவையில்லை. மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று குறுவைக்கு ரூ.10000, சம்பா பருவத்துக்கு ரூ.10000 வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

காப்பீடுத் தொகை வழங்குவதில் முறைகேடு: காவேரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா் குரு. கோபிகணேசன் பேசியது: மாவட்டத்தில் உதவி வேளாண் அலுவலா்கள் காப்பீட்டு நிறுவன ஊழியா்களுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனா். பயிா் பாதிப்பு உள்ளது போல கணக்கு காட்டுவதற்காக பணம் கொடுக்கும் கிராமங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை அறிவிக்கப்படுகிறது.

விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் மகாபாரதி, விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும், உரிய விசாரணை செய்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் சண்முகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயகன் அமல்ராஜ், துணைப் பதிவாளா் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT