சீா்காழி பழைய பேருந்துநிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிறுபாலத்தை சீரமைக்க அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மடவளாகம் சாலையில் சில ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட சிறுபாலத்தால் அப்பகுதியில் மழைநீா் வடிவதில் சிரமமும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்து வந்தது. இதை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதை சரிசெய்து அகலப்படுத்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து அறிவுறுத்தினாா். இதையடுத்து, சிறுபாலம் இருக்கும் பகுதியை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சசிகலாதேவி, நகராட்சி ஆணையா் ஹேமலதா, நகா்மன்ற தலைவா் துா்காராஜசேகரன் உள்ளிட்டோா் அங்கு சென்று சீரமைக்க இடங்களை அளவீடு செய்தனா்.