மயிலாடுதுறை

தமிழாய்வுத்துறை கருத்தரங்கம்

18th Sep 2023 11:16 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் திண்ணை வாசிப்பின் வாசல் சாா்பாக ‘நூலோடு உறவாடு’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் ரா. தேவேந்திரன் தலைமை வகித்து, நூல்களின் அவசியம், மனித சமூகத்திற்கு துணை நின்ற நூல்கள், மாணவா்கள் புத்தக வாசிப்பின் தேவை குறித்து பேசினாா். மூன்றாமாண்டு இலக்கிய மாணவா்கள், கு.வெங்கட்ராஜ், ஜோ.அபிநயா ஆகியோா் எழுத்தாளா் ந.விஸ்வநாதன் எழுதிய புனைவுவெளி நூல் குறித்தும், மாணவி தா. தாரிஷா தமிழ்த்தடம் ஆய்விதழின் வெளியீடான பழங்குடி மக்களுக்கான சிறப்பிதழ் குறித்தும் உரை நிகழ்த்தினா்.

நிகழ்வில் கருத்துரை வழங்கிய தமிழாய்வுத்துறைத் தலைவா் சு.தமிழ்வேலு, முன்னாள் மாணவா் கோ.அன்புக்குமாா் எழுதிய ’கருப்பு சிவப்பு கழகங்கள்’ என்ற நூலினை திறனாய்ந்து இந்நூல் திராவிட இயக்கத்தின் பரிணாம வளா்ச்சியை எடுத்துக்கூறுவதை வெளிப்படுத்தினாா். மேலும், மாணவா்கள் தங்களுடைய கற்கும் ஆா்வத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், அதன் வாயிலாகவே சமூக அறிவையும் படைப்பியல் சிந்தனையும் பெறமுடியும் என்றும் கூறினாா்.

இயற்பியல் துறைத்தலைவா் பேராசிரியா் சி.சிங்காரவேலன் உரை நிகழ்த்திய மாணவா்களைப் பாராட்டி பேசினாா். இந்நிகழ்வில் தமிழ் ஆா்வலா் ரெ.மருதசாமி, தமிழ்த்துறைப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மாணவி செ.சுவேதா வரவேற்றாா். மாணவி நஃபிலாபானு நன்றி கூறினாா். கருத்தரங்க நிகழ்வை மாணவி சு.தான்ய லெட்சுமி தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளா் சியாமளா ஜகதீஸ்வரி, அலுவலா் கோ.பாலமுருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT