மயிலாடுதுறை: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன் தலைமை வகித்தாா். மண்டல செயலாளா் சு. கலியபெருமாள், சட்டப்பேரவை தொகுதித் தலைவா் தாழை வரதராஜன், தொகுதி செயலாளா் சந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் மணிசெந்தில் பங்கேற்று, உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கு எதிராக செயல்படும் கா்நாடக அரசைக் கண்டித்தும், போராட்டக்காரா்கள் தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் பேசினாா். மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் முகமது யூசுப், மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளா் கி.காசிராமன், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் கவிதா அறிவழகன் ஆகியோரும் கண்டன உரையாற்றினா். முன்னதாக, காந்தி, காமராஜா் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தனா்.