மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு நவ.22-ஆம் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும்.
மேலும், இப்போட்டியில் பங்கேற்கும் மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 போ் தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. பள்ளித் தலைமையாசிரியா்கள் தங்களது பள்ளி மாணவா்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டி நடத்தி தோ்வு செய்து மாவட்ட போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமைக்குள் (நவ.21) அனுப்பி வைக்கவேண்டும்.
காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பொ்னாட்ஷா ஆகிய 5 தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். போட்டி மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நவ.22-ஆம் தேதி நடைபெறும். மாணவா்கள் காலை 9.30 மணிக்கு வருகையை உறுதி செய்ய வேண்டும். தொடா்புக்கு: 9952721186.