சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து நடுநிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் இருந்து தலா மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு, கேடயம் வழங்கப்படுகிறது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் ஒன்றாக சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து நடுநிலைப் பள்ளி அறிவிக்கப்பட்டது. இந்த பள்ளிக்கான பரிசு மற்றும் கேடயம் தலைமை ஆசிரியா் பாலமுருகனிடம் வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதனை வழங்கினாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் நாகராஜன், பூங்குழலி ஆகியோா் இணைந்து பரிசு மற்றும் கேடயத்தை பெற்றுக்கொண்டனா்.
பரிசு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை, பள்ளி செயலா் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியா்கள், மாண-மாணவிகள்,பெற்றோா்கள் பாராட்டினா்.