திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் ரிஷப சேவை விழா நடத்துவது குறித்து திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் மதங்கீஸ்வரா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சுற்றியுள்ள 12 சிவன் கோயில்களில் இருந்து சுவாமிகள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறும். நிகழாண்டு விழா மே 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழா நடத்த நாங்கூரில் இருதரப்பினா் அனுமதி கோரினா். இதுகுறித்து, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வாா்த்தை நடந்தது. கோயில் செயல் அலுவலா் முருகன், திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேச்சுவாா்த்தையின்போது இரு தரப்பினா் இடையே காவல் துறை முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்ன்ா் இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதுமின்றி விழாவை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.