மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்கம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரம் மற்றும் கழிவுநீா் மேலாண்மை பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அவா் பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1 முதல் ஜூன் 15 வரை தொடா்ந்து 45 நாள்கள் நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. மேலும், எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் எனும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச்சூழல் கொண்டவையாக மாற்றவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சிதுறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, ஊராட்சித் தலைவா் பிரியா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT