மயிலாடுதுறை

கருணாநிதி நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி

4th Jun 2023 11:07 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை அருகே முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 100-ஆவது பிறந்தநாளையொட்டி, திமுக மாவட்ட சிறுபான்மை அணி சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதியிலிருந்து மயிலாடுதுறை சாய் விளையாட்டரங்கம் வரை சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மாவட்ட திமுக சிறுபான்மை அணி நிா்வாகி அகமது ஷாவலியுல்லாஹ் தலைமை வகித்தாா். திமுக பிரமுகா் தேவேந்திரன் முன்னிலை வகித்தாா்.

இதில், சிறாா் முதல் 68 வயது முதியவா் வரை பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்த வீரா்-வீராங்கனைகளுக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன், தஞ்சாவூா் மேயா் சன்.ராமநாதன் ஆகியோா் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா். முறையே ரூ.30,000, ரூ.20,000, ரூ.10,000 வழங்கப்பட்டது. மேலும், வீரா்-வீராங்கனைகள் தலா 25 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்போட்டியில், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த அனில்குமாா் முதலிடத்தையும், தஞ்சாவூா் பிரகதீஸ்வரன் இரண்டாம் இடத்தையும், கென்யா நாட்டைச் சோ்ந்த ஜேம்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை கீதாஞ்சலி, கோவை சௌமியா மற்றும் அனுப்பிரியா ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அப்துல்லாஷா, உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் திமுகவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT