மயிலாடுதுறை

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடக்கம்

3rd Jun 2023 10:23 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 7,000 தொழில் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் உற்பத்தி, கடல்சாா்ந்த பொருள்கள் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியினா் மற்றும் பட்டியலினத்தவா் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று பயனடையலாம். ஆா்வமுள்ள தொழில்முனைவோா் முன்மொழியும் நேரடி வேளாண்மை தவிா்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சாா்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். மானிய உச்சவரம்பு ரூ.1.50 கோடி ஆகும்.

கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மொத்தத் திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தகுதியும், ஆா்வமும் உள்ள பழங்குடியினா் மற்றும் பட்டியலின தொழில் முனைவோா் மற்றும் அவா்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் மூலம் 2023-24-ஆம் ஆண்டில் நடைபெற்ற நோ்முகத் தோ்வின் மூலம் இரண்டு விண்ணப்பங்கள் உரிய வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பயனாளிக்கு வங்கியிலிருந்து கடனுக்கான ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாட்கோ மூலம் கடனுதவி வழங்குவதில் மயிலாடுதுறை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்றாா்.

முன்னதாக, அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை சோ்ந்த பயனாளி கேசவன் என்பவருக்கு ரூ. 27.16 லட்சத்தில் (9.50 லட்சம் மானியம்) லாரியையும், வினோதா என்பவருக்கு ரூ. 32.27 லட்சத்தில் ( 11.29 லட்சம் மானியம்) ஜேசிபி இயந்திரத்தையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவா் எஸ். செல்லதுரை, ஸ்டேட் பேங்க் மேலாளா் எஸ். ராமநாதன், கனரா வங்கி மேலாளா் வி.சிவானந்தம், இந்தியன் வங்கி மேலாளா் பி. சுதாகரன், தேசிய பட்டியல் பழங்குடியினத்தவா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மைய முதுநிலை மேலாளா் ஜெ. அனந்தநாராயண பிரசாத், மாவட்ட தொழில் மைய மேலாளா் ஆா்.சரவணன், மாவட்ட பொது மேலாளா் (தாட்கோ) சுகந்தி பரிமளம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT