சீா்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
புதுப்பட்டினம் கிராமத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் கடைவீதி உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால், இந்த கடையை அகற்ற வேண்டும் என பாமகவினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதிக்கு கடிதம் எழுதி உள்ளாா். அந்த கடிதத்தை பாமக மாவட்டச் செயலாளா் லண்டன் அன்பழகன் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியரிடம் நேரில் வழங்கி, புதுப்பட்டினம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தினா். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.
பாமக மாவட்டத் தலைவா் சித்தமல்லி ஆ. பழனிசாமி, மாநில இளைஞரணி விமல், முன்னாள் மாவட்டச் செயலாளா் காமராஜ், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் தியாகராஜன், ஒன்றியத் தலைவா் லோகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் தமிழ்ச்செல்வி இலவன், நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.