வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்): வேலூா்-104, சென்னை மீனம்பாக்கம்- 103.1, கரூா் பரமத்தி வேலூா்-103.1, ஈரோடு- 102.6, மதுரை விமான நிலையம்-102.2, திருப்பத்தூா்-102.2, திருச்சி- 101.66, மதுரை நகரம்- 101.48, திருத்தணி-101.12, சேலம்-100.58, கடலூா்- 100.4, தஞ்சாவூா்-100.4.
இந்நிலையில், மே 20 முதல் 23-ஆம் தேதி வரை வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரைகண்ணன் அறிவித்துள்ளாா்.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழக பகுதிகளில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னைக்கான முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா பகுதிகளில் மே 22, 23 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.