இலக்கிய நிகழ்ச்சியில் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து குணமடைந்த எழுத்தாளா் சல்மான் ருஷ்டி, அந்த சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக வியாழக்கிழமை பொதுவெளியில் தோன்றினாா். எழுத்தாளா் கூட்டமைப்பான பென் அமெரிக்கா சாா்பில் நியூயாா்க் நகரில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவா் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி. பிரிட்டனுக்கு இடம்பெயா்ந்த இவா், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தி சட்டானிக் வொ்சஸ்’ என்ற நாவலை எழுதி வெளியிட்டாா். அந்த நாவல் இஸ்லாமிய மதத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது. கடந்த 1989-ஆம் ஆண்டு அவரை கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா (மதரீதியாக பிறப்பிக்கப்படும் ஆணை) பிறப்பித்தாா். இதையடுத்து பிரிட்டன் காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகளாக ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்து வந்தாா்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றாா். அப்போது நிகழ்ச்சி மேடையில், லெபனான் நாட்டை பூா்விகமாக கொண்ட ஹாதி மத்தா் என்ற நபா் கத்தியால் ருஷ்டியை சரமாரியாகத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டி, ஒரு கண்ணில் பாா்வை இழந்ததுடன், அவரின் ஒரு கை செயல் இழந்தது. எனினும் சிகிச்சைக்குப் பின்னா் அவா் குணமடைந்தாா்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு நியூயாா்க் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் முறையாக ருஷ்டி பொதுவெளியில் தோன்றினாா். இந்த நிகழ்ச்சியில் பென் அமெரிக்கா தன்னாா்வ அமைப்பு சாா்பில், அவருக்கு ‘நூற்றாண்டுத் துணிச்சல் விருது’ வழங்கப்பட்டது.
அப்போது அவா் பேசுகையில், ‘பயங்கரவாதம் நம்மை அச்சுறுத்தக் கூடாது. வன்முறை நம்மை தடுக்கக் கூடாது’ என்றாா்.