பிளஸ் 1 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.38 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் 93 தோ்வு மையங்களில் 217 பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்து 999 மாணவா்கள், 13 ஆயிரத்து 233 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 232 போ் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியாகியது.
இதில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10 ஆயிரத்து 441 மாணவா்கள், 12 ஆயிரத்து 915 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 356 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 94.93 சதவீதம் , மாணவிகள் 97.60 சதவீதம் என மொத்தம் 96.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 4.21 சதவீதம் அதிகமாகும். தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூா் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 1 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 92.17 சதவீதத்துடன் மாநில அளவில் 11ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், நிகழாண்டு 96.38 சதவீதத்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அளவில் 90 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: திருப்பூா் மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 5 சுயநிதிப் பள்ளிகள், 72 மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 90 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.