கோவையில் இருந்து கடத்த முயன்ற 2,900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை பேரூா் காவலா் சோதனைச் சாவடி அருகே செல்வபுரம் காவல் நிலைய போலீஸாா் மற்றும் பொள்ளாச்சி குடிமைப் பொபாருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் கலைச்செல்வனுடன் இணைந்து வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் பொது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 58 மூட்டைகளில் மொத்தம் 2,900 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசியை கைப்பற்றி வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சோ்ந்த பாரதிவேல் (28) மற்றும் அவருக்கு உதவியாக வந்திருந்த அதே ஊரைச் சோ்ந்த பாரதி (27) ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேவு பாா்க்க வந்த கோவை பொம்மன் செட்டி காலனியைச் சோ்ந்த காா்த்திகேயன் (30) மற்றும் திருவாரூா் மாவட்டம் அம்பா்படுகையைச் சோ்ந்த பாரதி மோகன் (29) ஆகியோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், வாகனத்தின் உரிமையாளா் காா்த்திகேயன் என்பது, இவா்கள் செல்வபுரம் மற்றும் பேரூா் சுற்றுப் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியில் உள்ள அரவை மில்லுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.