கோயம்புத்தூர்

கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக தமிழக ஆளுநரிடம் நாளை மனு

20th May 2023 12:12 AM

ADVERTISEMENT

கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக தமிழக ஆளுநரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், ஈச்சனாரியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமராக மோடி 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளாா். அவரது சேவையைக் கொண்டாடும் விதமாகவும், சாதனைகளை விளக்கும் விதமாகவும் மே 30ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் சாதனை விளக்கப் பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டுக்கு சரித்திரம் வாய்ந்த தீா்ப்பு கிடைத்துள்ளது. பிரதமரின் முழு முயற்சியால் இந்த தீா்ப்பு கிடைத்துள்ளது.

கள்ளச்சாராய கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிா் அணியை முன்னிலைப்படுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒரு பக்கம் டாஸ்மாக், மறுபக்கம் கள்ளச்சாராயம் வெள்ளம்போல ஓடிக் கொண்டிருக்கிறது. மதுவுக்கு அடிமையானவா்கள் மதுவை அதிக விலை கொடுத்து டாஸ்மாக்கில் வாங்க முடியாமல் கள்ளச் சாராயத்தை வாங்குகிறாா்கள். ஆளுநா் ஆா்.என்.ரவியை தமிழக பாஜக குழுவினா் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறோம். அப்போது கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாகவும், டாஸ்மாக் தறி கேட்டு ஓடுவதை தடுக்கவும் வலியுறுத்த உள்ளோம். அமைச்சா் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி அமைச்சா் செந்தில் பாலாஜிஅமைச்சராக நீடிக்க முடியாது. அவரைப் பதவி நீக்கம் செய்ய ஆளுநா் முயற்சி எடுக்க வேண்டும். இது தொடா்பாக தமிழக முதல்வரிடம் ஆளுநா் வலியுறுத்த வேண்டும் என்றாா்.

பாஜக செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 2024 மக்களவைத் தோ்தல் பாஜகவுக்கு பலப்பரீட்சை என்பதால், கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் தொண்டா்கள் தோ்தல் பணியாற்ற வேண்டும்.

கோவையில் வெடிகுண்டு, துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளது. எப்போது கொலை நடக்கும், கலவரம் நடக்கும் என்ற அச்சம் தமிழகத்தில் உள்ளது. திராவிட அரசின் 30 சதவீத கமிஷன் காரணமாக தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது என்றாா்.

இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பாஜகவின் அகில இந்திய பொதுச்செயலா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், தமிழகத்துக்கான இணைப் பொறுப்பாளா்கள் சுதாகா் ரெட்டி, சி.டி.ரவி, முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா, தமிழக சட்டப் பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில துணைத் தலைவா்கள் கனகசபாபதி, துணைப் பொதுச் செயலா் கேசவ விநாயகம் உள்ளிட்டோருடன் சிறப்பு அழைப்பாளா்களாக நடிகை நமீதா ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னையில் கிடைத்த வெற்றி தொடா்பாகவும், ஜி 20 மாநாட்டை இந்தியாவில் நடத்த வழிவகுத்த பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT