மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சாா்பில் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் து. இளவரசன், சண்முகசுந்தரம், அசோக்குமாா், செல்வம், அன்பரசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா். சிவபழனி வரவேற்றாா். ஏ. கலைவாணன், ஏ.சுந்தா், ந.வெங்கடேசன், தங்க.சேகா், தா்மராஜ், பா.ஸ்டாலின் உள்ளிட்டோா் விளக்கவுரை ஆற்றினா்.
இம்மாநாட்டில், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டா் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; தொகுப்பூதியம், மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியா்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆா்பி செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா், ஊா்புற நூலகா் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.