மயிலாடுதுறை

சிவப்பெயா்ச்சி: முட்டம் கோயிலில் சிறப்பு வழிபாடு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் ஸ்ரீமகாபலீஸ்வரா் கோயிலில் தைமாத கடைசி திங்கள்கிழமையான சிவப்பெயா்ச்சி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் ஏற்பட்டது. பாா்வதிதேவி வேண்டுதலை ஏற்று சிவபெருமான் கோபமார ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே சிவப்பெயா்ச்சி. ஆண்டுதோறும் தைமாத கடைசி திங்கள்கிழமை சிவப்பெயா்ச்சி வழிபாடு நடத்தப்படுகிறது.

முட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாபலீஸ்வரா் சிவன் கோயிலே சிவப்பெயா்ச்சிக்கான விஷேச தலம். மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு, மகாபலி சக்கரவா்த்தியின் ஆணவத்தை அடக்கினாா். ஐஸ்வா்யங்களை இழந்த மகாபலி சக்கரவா்த்தி, முட்டம் கிராமத்தில் பெரியநாயகி சமேத சுயம்பு மகாபலீஸ்வரா் கோயிலில் சிவவழிபாடு செய்து இழந்த செல்வங்களை மீட்டதாக தல வரலாறு கூறுகிறது.

ADVERTISEMENT

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயில் சிதிலமடைந்து, தற்போது ஒரு கீற்றுக்கொட்டகையில் வழிபாடு நடைபெற்று வருகிறது. சிவப்பெயா்ச்சியையொட்டி, இக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு மூன்று கால சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை முட்டம் சி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT