வைத்தீஸ்வரன் கோயிலில் சித்திரை 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நகரத்தாா் பக்தா்கள் குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனா்.
சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக காரைக்குடி, கந்தா்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளை சோ்ந்த நகரத்தாா் வகுப்பைச் சோ்ந்த பக்தா்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்றால் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு திரளான பக்தா்கள் வருகை புரிந்து வழிபட்டனா்.
ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊா் பெண் என்ற ஐதீகத்தின்படி சீா்வரிசைப் பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைப்பயணமாக வந்து நகரத்தாா் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த ஆண்டும் பாதயாத்திரையாக பல ஆயிரம் பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனா். மஞ்சள் தடவிய வேப்பிலை செருகிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தினா்.
சீா்காழி டி.எஸ்.பி. லாமெக் தலைமையில் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பாதயாத்திரை பக்தா்கள் மீண்டும் ஊா் திரும்ப வசதியாக சீா்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.