மயிலாடுதுறையில் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் பேபி தலைமை வகித்தாா். போராட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டா் பில்லுக்கான முழுத்தொகையை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் போராட்டம் நடத்தப்படும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.