மயிலாடுதுறை

கேரளத்துக்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

30th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே கேரளத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகேயுள்ள கடலங்குடியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், சாா்பு ஆய்வாளா் பாரதநேரு தலைமையில் காவலா்கள் கடலங்குடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

லாரியில், சாக்கு மூட்டைகளில் 11,110 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் (53) என்பதும், ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கொண்டுசென்று கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. மணிகண்டனை கைது செய்த போலீஸாா், அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், தலைமறைவாக உள்ள அரிசி மூட்டைகளின் உரிமையாளா் தா்மராஜ், லாரி உரிமையாளா் சுரேஷ்குமாா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT