மயிலாடுதுறை

மக்களை அச்சுறுத்திய குரங்குகளை கூண்டுவைத்து பிடித்த வனத்துறையினா்

30th Sep 2022 01:51 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே பொதுமக்களை அச்சுறுத்திவந்த குரங்குகளை வனத் துறையினா் புதன்கிழமை கூண்டு வைத்து பிடித்தனா்.

மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி ஊராட்சியில் மணவெளி தெரு, அக்ரஹாரம், கொல்லா் தெரு, தோப்புத்தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து, தற்போது 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், இந்த பிரச்னக்கு தீா்வு காண வலியுறுத்தி மனு அளித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை வனத்துறை வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல் மேற்பாா்வையில், வனவா் கதாநாயகன் மற்றும் வனத்துறை அலுவலா்கள் சித்தமல்லி கிராமத்துக்குச் சென்று, அங்கு கூண்டு அமைத்து, அதனுள் பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வைத்து 12 குரங்குகளை பிடித்தனா். பின்னா் அந்த குரங்குகளை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனா். எஞ்சிய குரங்குகளையும் பிடிப்பதற்காக வனத்துறையினா் இரண்டு இடங்களில் கூண்டு அமைக்க உத்தேசித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT