மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 மெட்ரிக் டன் விதை நெல் விற்பனைக்குத் தடை

30th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 மெட்ரிக் டன் விதை நெல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குனா் விநாயகமூா்த்தி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்துக்கு நடவு செய்வதற்காக விவசாயிகள் விதைவிடும் பணி மற்றும் நடவு செய்யும் பணிகளில் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனா். சாகுபடிக்குத் தேவையான நீண்டகால ரகங்களான சிஆா் 1009, சப்-1, கோ 43, மத்திய கால ரகங்களான ஏடிடி 39, 46, ஏடிடி 42, தாளடி பருவ ரகங்களான ஏடிடி 37, ஏடிடி 45, கோ 51, டிபிஎஸ் 5, ஏஎஸ்டி 16 போன்ற நெல்விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா். அந்த விதைகள் அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் விதை விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்பட்ட மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், மங்கைநல்லூா், குத்தாலம் பகுதிகளில் உள்ள 17 விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் விநாயகமூா்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில், விதை உரிமங்கள், இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள், விதை முளைப்புத்திறனை உறுதி செய்தபின்னா் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: விதை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விதைநெல் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டத்தில் 18.46 மெட்ரிக் டன் விதைகள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, நாகை விதை ஆய்வு துணை இயக்குநா் தேவேந்திரன், ஆய்வாளா்கள் பாலையன், நவீன்சேவியா், சத்யா ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT