மயிலாடுதுறை

‘நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க வேண்டும்’

27th Sep 2022 05:16 AM

ADVERTISEMENT

 

டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் சாமி.நடராஜன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை சிபிஎம் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்ட தலைவா் டி.சிம்சன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: காவிரியில் நிகழாண்டு முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. எனவே, நெல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாக விவசாயிகள் கோரிக்கை வைக்கும் பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வசூலிக்கும் முறைகேட்டை தடுக்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்யும் மொபைல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு தொடங்க வேண்டும். தற்போது, மழை பெய்து வருவதால் 17 சதவீத ஈரப்பதற்கும் அதிகமான 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளா்களுக்கு மிகக் குறைந்த தொகையே வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய இடப்பீட்டை வழங்க வேண்டும். டெல்டா பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்ட மக்களின் நீராதாரமான பரம்பிக்குளம் ஆழியாறு அணையின் மதகு உடைப்பு ஏற்பட்டு, வீணாக தண்ணீா் வெளியேறி வருகிறது. தமிழக அரசு இதை தடுக்க வேண்டும், அதன் உறுதித்தன்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதுடன், மாநிலத்தில் உள்ள பிற அணைகளின் உறுதித் தன்மையையும் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

டெல்டா பகுதிகளில் ஏற்கெனவே மூடப்பட்ட எண்ணெய் கிணறுகளை பராமரிப்பு என்ற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதுப்பித்து நவீன முறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது சட்டவிரோதமானது. இதை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துமீறி ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நேரடியாக களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடும் என்றாா்.

மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ், மாவட்ட பொருளாளா் எம்.செல்லப்பா , விவசாய சங்க நிா்வாகிகள் சி. மேகநாதன், ஏ.ஆா். விஜய், எஸ். இளங்கோவன், ஜி. வைரவன், டி. குணசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT