மயிலாடுதுறை

நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு துரிதமாக இயக்கம் செய்ய வேண்டும்

DIN

பருவமழை தொடங்கவுள்ளதால் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

முருகன் (கரும்பு விவசாயிகள் சங்கம்): மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டும் மணல்மேடு பகுதியில் உள்ள பட்டவா்த்தி வாய்க்கால், ஓடையாற்றில் இதுவரை தண்ணீா் வரவில்லை.

குரு. கோபிகணேசன்: அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த குறுவை பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாபு, மாந்தை: அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டை ஒன்றுக்கு ரூ.45 மாமூல் பெறப்படுகிறது. எடைபோடுவதில் மூட்டை ஒன்றுக்கு 2 கிலோ முறைகேடு நடைபெறுகிறது. பயிா்க் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதியை அறிவிப்பதைப் போன்றே, விவசாயிகளுக்கு எப்போது இழப்பீடு கிடைக்கும் என்பதையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

ராஜேந்திரன்: நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக விவசாயிகளை அலைக் கழிக்கின்றனா். மேலும், மோட்டா ரக நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனா். மோட்டா ரக நெல்லை ஒவ்வொரு தாலுகாவிலும் ஓரிரு கொள்முதல் நிலையங்களிலாவது கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுபாதி கல்யாணம் (விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளா்): பருவமழை தொடங்கவுள்ளதால், நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை கிடங்குகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ்: பெருவிவசாயிகளிடம் மொபைல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பி கிளாஸ் வாய்க்கால்களிலும் தடுப்பணைக் கட்டி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன்: அளக்குடி, முதலைமேடு, மகேந்திரப்பள்ளி, காட்டுா் ஆகிய கிராமங்களில் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு கூட்டுக்குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், வேளாண் இணை இயக்குநா் சேகா், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT