மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 10:04 PM

ADVERTISEMENT

 மயிலாடுதுறை அருகே கோழிக்குத்தி கிராமத்தில் உள்ள ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டம், சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் புகழ்பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீதயாலெக்ஷ்மி சமேத ஸ்ரீஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 14 அடி உயரத்தில் அத்தி மரத்திலான வானமுட்டி பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.

இத்தலம் பிப்பல மகரிஷிக்கு பெருமாள் சங்கு, சக்கர, கதா, அபய ஹஸ்தத்துடன் விஸ்வரூப தரிசனம் அளித்த தலமாகும். கோடிஹத்தி பாபவிமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வழிபடுவோருக்கு பிதுா்தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம், சரும வியாதி நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

புகழ்பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த செப்.5-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. குடமுழுக்கு தினமான வெள்ளிக்கிழமை காலை 8-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் புனித கடங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு, பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பரிவாரத் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. குடமுழுக்கையொட்டி வானமுட்டி பெருமாள் மூலிகை வா்ணம் தீட்டப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அரசு கூடுதல் தலைமை செயலா் தென்காசி ஜவஹா், கோட்டாட்சியா் வ. யுரேகா, தொழிலதிபா்கள் டெக்கான் என்.கே. மூா்த்தி, சூரி. விஜயகுமாா், சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலா் நிா்மலாதேவி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT