மத்திய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட தலைவா் ஐயப்பன், இந்திய மாணவா் சங்க மாவட்ட தலைவா் மணிபாரதி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலாளா் அறிவழகன், இந்திய மாணவா் சங்க மாவட்ட செயலாளா் அமுல்காஸ்ட்ரோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தாய் மொழியை மத்திய அரசு அழிக்க நினைப்பதாகவும், தேச மக்களின் ஒற்றுமையை சீா்குலைக்க நினைக்கும் மத்திய அரசின் இந்த செயல் கண்டனத்திற்கு உரியது என போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.