மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

 மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

படவிளக்கம்; மயிலாடுதுறையில் ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

மாவை கணேசன்: விவசாயிகளின் தேவைகள் குறித்து அளிக்கப்படும் மனுக்களுக்கு பதில் வருவதில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

வீரராஜ் (சீா்காழி): பயிா் பாதிப்பு குறித்து புள்ளியல் துறையினா் நடத்திய கணக்கெடுப்பில் மோசடி நடந்துள்ளது. இதனைத் தடுக்க பாதிக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகளே நேரடியாக பாா்வையிட்டு, பயிா் பாதிப்புகளை கணக்கிட்டு அரசே காப்பீட்டுத் தொகையை வழங்க அரசுக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும். மாவட்டத்தில் டிஏபி, யூரியா தட்டுப்பாடு நிலவுவதை சரிசெய்ய வேண்டும்.

ஆட்சியா்: அறுவடை நடைபெற்ற இடத்தில் மொபைல் டிபிசி மூலமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாகவே பயிா் பாதிப்புக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்பது குறித்து துறை செயலருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

குத்தாலம் பி. கல்யாணம்: தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை ரூ.124 கோடி செலவில் புதுப்பித்து மீண்டும் இயக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மாதிரிவேளூா் பகுதியில் உள்ள 810 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் அப்பகுதியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.

அன்பழகன்: மாவட்டத்தில் உள்ள 287 வருவாய் கிராமங்களில் 53 கிராமங்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமாா் 90,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில், 80000 டன் நெல் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள 10000 டன் நெல் ஓரிரு நாளில் அனுப்பப்படவுள்ளதால், திறந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தற்காலிகமாக மூடிவிட்டு, விவசாயிகளுக்கு தேவை ஏற்படும்போது மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வெளிமாநில நெல் கொள்முதல் செய்வதைக் கட்டுப்படுத்தலாம்.

குருகோபிகணேசன்: காப்பீட்டுத்துறையினரின் அலட்சியத்தால் 2021-22-ஆம் ஆண்டுக்கு உரிய சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போய்விட்ட நிலையில், இவ்வாண்டு குறுவையின்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிந்ததற்கு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்.

இக்கூட்டத்தில், நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு படுகை கிராமங்களைச் சோ்ந்த கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள காலங்களில் ஆற்றுவெள்ளம் ஊருக்குள் புகுவதை தடுக்க தடுப்புச் சுவா் அமைத்துத் தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதனிடையே, காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேட்டை தடுக்க வலியுறுத்தியும், குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு போதிய இருக்கைகள் வழங்கப்படாததை கண்டித்தும் விவசாயி அ. ராமலிங்கம் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT