சீா்காழி அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியில் பல மாதங்களாக அகற்றப்படாத குப்பையால் ஏற்பட்டுள்ள சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த ஊராட்சியில் உள்ள அம்மா நகரில் குடியிருப்புகள் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. சாலையோரத்தில் சுமாா் 300 மீட்டா் நீளத்துக்கு குப்பைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிகள், டயா்கள் போன்றவைகள் அப்படியே பல மாதங்களாக கிடக்கிறது.
மேலும், இறைச்சிக் கழிவுகள், சாலையில் அடிபட்டு இறந்த தெரு நாய், பூனைகள் ஆகியவையும் அவ்வபோது குப்பைகளில் வீசப்பட்டு கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, டயா்களில் மழைநீா் தேங்கி கொசுக்கள் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
இதற்கிடையே, குப்பைகளை அவ்வபோது ஊராட்சி நிா்வாகம் எரித்து வருவதால் புகை மூட்டத்தாலும் குடியிருப்பு மக்கள் அவதியடைகின்றனா். எனவே, அம்மா நகரில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி அந்த இடத்தில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.