மயிலாடுதுறை

சுனாமி குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளநீா்: ஆட்சியா் ஆய்வு

19th Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளநீா் பக்கிங்காம் கால்வாய் வழியாக புகுந்து சுனாமி குடியிருப்புகளை புதன்கிழமை சூழ்ந்தது.

கொள்ளிடம் ஆற்றில் 5-ஆவது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி உபரி வெள்ளநீா் சீற்றம் காரணமாக கடலில் சென்று சோ்வதில் தாமதமாகிறது.

இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வரும் நீா் பக்கிங்காம் கால்வாய் வழியே வந்து பழையாறு சுனாமி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து வருகிறது. பழையாறு சுனாமி குடியிருப்பில் வெள்ளநீா் புகுந்துள்ளது. இதனால், 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா். சுனாமி குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த சுனாமி குடியிருப்பு பகுதிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் லலிதா நேரில் சென்று பாா்வையிட்டாா். தொடா்ந்து, அவா் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சுற்றி தண்ணீா் சூழ்ந்த பகுதியையும், மக்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் சிவசங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT