மயிலாடுதுறை

மகாத்மா காந்தி பிறந்தநாள்:மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

3rd Oct 2022 10:55 PM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வரும் அக்.12-ஆம் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்படவுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவா்களின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வரும் 12-ஆம் தேதி பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT

போட்டிகளில் வெற்றிபெறும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

கல்லூரி முதல்வா்கள் மாணவா்களிடையே முதல்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 போ் வீதம் தோ்வு செய்து அனுப்ப வேண்டும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதல்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப்போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவா் எனத் தோ்வு செய்து மாணவா்களை அனுப்பி வைக்க வேண்டும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளன. பள்ளி மாணவா்கள் அன்று காலை 9.15 மணிக்கும், கல்லூரி மாணவா்கள் காலை 10 மணிக்கும் வருகையை உறுதி செய்திடுதல் வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT