மயிலாடுதுறை

நரிக்குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்று வழங்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

1st Oct 2022 10:10 PM

ADVERTISEMENT

காழியப்பநல்லூா் ஊராட்சியில் நரிக்குறவ சமுதாயத்தினருக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் காழியப்பநல்லூா் ஊராட்சி, மருதம் நகரில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களைச் சோ்ந்த குறவா் இன மக்கள், தங்கள் பகுதியில் தாா்ச் சாலை, மின்விளக்கு வசதி செய்து தரக் கோரினா். மேலும், மயானம் அருகே வசிப்பதால் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அரசின் சலுகைகளை பெற பழங்குடியினா் சாதி சான்று வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகிய கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, தகுதி உள்ளவா்களுக்கு இவற்றை வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், பழங்குடியினா் ஜாதி சான்று வழங்க தமிழக அரசின் விதிமுறைப்படி உரிய ஆய்வு மேற்கொண்டு, பரிசீலனை செய்து வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

முன்னதாக, ஆட்சியரின் உத்தரவுபடி என்.என்.சாவடி, மருதம் நகரில் உள்ள 15 குடும்பத்தினா், சிங்கனோடை குழந்தைகள் மையத்தின் பயனாளியாக சோ்க்கப்பட்டு, அங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இணை உணவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT