சீா்காழி பழைய பேருந்து நிலைய வா்த்தக சங்கத்தின் சாா்பில் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளன. இதில், வாடகை பாக்கிக்காக கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகத்தினா் சீல் வைத்தனா்.
இதை கண்டித்தும், கடைகளுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் சீா்காழி பழைய பேருந்து நிலைய வா்த்தக சங்கத்தினா் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சீா்காழி பழைய பேருந்து நிலையம், காமராஜா்வீதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்காததால், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் கூறுகையில், ‘ கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் கடைகள் அடைக்கப்பட்டதால், வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டபோது, 2 ஆண்டுகளுக்கான வாடகையில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே விலக்கு அளித்தனா். மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகாசமின்றி கட்ட கூறியதால், கட்ட இயலவில்லை. இதற்காக கடைகளுக்கு சீல் வைத்தனா் எனத் தெரிவித்தனா்.
நகராட்சி தரப்பில் கூறுகையில், நகராட்சி கடைகளுக்கு பல லட்சங்கள் வாடகை நிலுவையில் உள்ளது. நிலுவை தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் கட்ட தவறியதால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்தனா்.