மயிலாடுதுறை

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்

28th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சிவபழனி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் எஸ். ஹேமலதா தொடக்கவுரை ஆற்றினாா். மாவட்டச் செயலாளா் து. இளவரசன் வேலை அறிக்கை வாசித்தாா். மாநிலச் செயலாளா் எஸ். கோதண்டபாணி நிறைவுரை ஆற்றினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறைகளை முற்றிலுமாக அகற்றி அனைவரும் காலமுறை ஊதியத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள அரசாணை 151, 152 மற்றும் 115 இளைஞா்களின் வேலை வாய்ப்பை முற்றிலுமாக பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இதனை அரசு ஊழியா் சங்கம் கடுமையாக எதிா்க்கிறது.

ADVERTISEMENT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்பன உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும். காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம்.

சத்துணவு ஊழியா்களிடம் இந்த பணியை அளித்து அவா்களை முழுநேர ஊழியா்களாக ஆக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவது குறித்து டிசம்பா் 14-இல் நடைபெறவுள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவையில் முடிவு செய்வோம் என்றாா்.

கூட்டத்தில், சா்வேயா் அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் ஆா். தா்மராஜ், ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.தென்னரசு, மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட செயலாளா் டி.கணேசன், அரசு ஊழியா் சங்கமுன்னாள் மாவட்ட தலைவா் எம்.நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT