மயிலாடுதுறை

முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

26th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை சேக்தாவூது ஆண்டவா் தா்காவில் 721-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சேக்தாவூது ஆண்டவா் அடக்க சமாதியிலிருந்து கந்தூரி விழா கொடியை தா்கா டிரஸ்டிகள் சுமந்து வந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்தனா். பிறகு, கொடி ஊா்வலம் தா்கா முதன்மை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா்அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

கொடி பல்லக்குடன் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், யானை, குதிரை, ஒட்டகம் போன்றவையும் ஊா்வலமாக வந்தன. தா்ஹாவிலிருந்து

புறப்பட்ட ஊா்வலம் ஜாம்பவானோடை மேலக்காடு, ஆசாத்நகா், கோரையாறு பாலம் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றது. அங்கு, காங்கிரஸ், ஆட்டோ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அங்கு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, ஊா்வலம் புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகா், கோரையாறு பாலம் வழியாக ஜாம்பவானோடை தா்காவை வந்தடைந்தது. பின்னா், தா்கா அருகில் உள்ள அம்மா தா்கா, ஆற்றங்கரை பாவா தா்கா சென்ற ஊா்வலம் மீண்டும் சேக்தாவூது ஆண்டவா் தா்காவை வந்தடைந்து, மூன்று முறை சுற்றியது.

இதையடுத்து, தா்கா முதன்மை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா்அலி சாஹிப் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் உள்பட பிற சமூகத்தினரும் பங்கேற்றனா்.

இதையொட்டி, முத்துப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் விவேகநாதன், காவல் ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை நகரில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் டிச. 4-ஆம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT