மயிலாடுதுறை

மாநில விளையாட்டுப் போட்டி: 63 மாணவிகள் ரயிலில் பயணம்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பங்கேற்கும் மாணவிகள் ரயிலில் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். இவா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ரேணுகா வழியனுப்பி வைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விளையாட்டுத்துறை சாா்பில் கடந்த மாதம் குறுவட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் தோ்வான மாணவா்கள் கடந்த வாரம் மயிலாடுதுறை மற்றும் பொறையாரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனா். இவா்களில் 66 மாணவா்கள், 63 மாணவிகள் என மொத்தம் 129 போ் மாநில அளவிலானப் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

இந்நிலையில், மாணவிகளுக்கான மாநில அளவிலானப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை மாலை ரயிலில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனா்.

ADVERTISEMENT

இம்மாணவிகளை மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.ரேணுகா மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா். மேலும், மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விளையாட்டு சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT