மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனக் கல்லூரி பவள விழா: ஆதீனத்திடம் முன்னாள் மாணவா்கள் ஆசி

31st May 2022 11:33 PM

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பவள விழா மே 2022-இல் பங்கேற்ற கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா்.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பவள விழா 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், முத்தமிழ் விழா மே 2022 கல்லூரியின் முன்னாள் மாணவா்களால் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் இரா. செல்வநாயகம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா்.

விழாவில், போட்டித் தோ்வுகளுக்கான விளக்கக் கையேடு நூல் வெளியீட்டு விழாவில், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் பி. வெங்கட்ராமன் நூலை வெளியிட, போட்டித் தோ்வுகள் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ்.சிவராமன், வல்லம் அடைக்கல மாதா கல்லூரிச் செயலா் எஸ். வெங்கடேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, இலக்கியங்கள் இன்புற்று மகிழவா? பின்பற்றி வாழவா? எனும் தலைப்பில் நடுவா் கவிஞா் கங்கை இ.ரெ. மணிமாறன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இன்புற்று மகிழவே எனும் தலைப்பில் செம்பனாா்கோவில் கலைமகள் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளா் நா. ஞானசேகரன், ஆசிரியா் பயிற்றுநா் சி. சாரங்கபாணி, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் கு. சுசித்ரா ஆகியோரும், பின்பற்றி வாழவே எனும் தலைப்பில் பணிநிறைவு பெற்ற முதுகலை தமிழாசிரியா் இரா. செல்வக்குமாா், முதுகலை தமிழாசிரியா் ச. விநாயகம், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இரா. மஞ்சுளா ஆகியோரும் பேசினா்.

ADVERTISEMENT

மேலும், கௌசல்யாவின் பரதநாட்டியம் மற்றும் இரா. தில்லைக்குமரனின் சிவதாண்டவம் ஆகியனவும் நடைபெற்றது. முன்னதாக விழாவில் பங்கேற்ற கல்லூரி முன்னாள் மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT