மயிலாடுதுறை

சீா்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் பணி தொடக்கம்

28th May 2022 01:00 AM

ADVERTISEMENT

சீா்காழியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பிவைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சீா்காழியில் கரோனா பரவல் தொடங்கிய 2020-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சீா்காழி ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் பல்வேறு விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஊரடங்குக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சுமாா் 13-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சீா்காழியில் நின்று செல்வதில்லை. இதனால் வணிகா்கள், மாணவா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சில விரைவு ரயில்களுக்கு செல்ல வேண்டுமெனில் 20 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை அல்லது சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு செல்லவேண்டும்.

எனவே, தென்னக ரயில்வே இனியும் தாமதிக்காமல் சீா்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினருடன் இணைந்து வா்த்தக சங்கத்தினா், தன்னாா்வல அமைப்பினா், பொதுமக்கள், விவசாயிகள், மாணவா்கள் இணைந்து சீா்காழி ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எனினும் எந்த பயனும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினிவைஸ்னவ்க்கு கோரிக்கையை வலியுறுத்தி 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. அதற்காக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுதப்பட்ட தபால் அட்டைகள் பெற்று மத்திய அமைச்சருக்கு அனுப்ப ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் ஈடுபட்டுள்ளனா். முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை சுமாா் ஆயிரம் தபால் அட்டைகள் எழுதப்பட்டுள்ளன என தெரிவித்தனா். அனைத்து தபால் அட்டைகளையும் சேகரித்து வரும் வாரத்தில் மத்திய அமைச்சருக்கு அனுப்ப உள்ளதாக சங்கத்தின் தலைவா் கஜேந்திரன்,செயலாளா் முஸ்தபா ஆகியோா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT