மயிலாடுதுறை

கரும்பு உற்பத்தியாளா் பொதுப் பேரவைக் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை

27th May 2022 09:56 PM

ADVERTISEMENT

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசு குழு அமைப்பது தொடா்பாக கரும்பு உற்பத்தியாளா்களை ஒருங்கிணைத்து பொதுப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளா் சி. மோகன்குமாா் அளித்த கோரிக்கை மனு: கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நிதி ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து ஆலையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரவைக்கு தேவையான கரும்பை உற்பத்தி செய்வதாக உறுதியளித்தனா். எனினும், தமிழக அரசு ஆலைக்கு நிதி ஒதுக்காமலும், குழு அமைக்காமலும் உள்ளது. எனவே, கரும்பு உற்பத்தி மற்றும் ஆலை பங்குதாரா்களை ஒருங்கிணைத்து கரும்பு உற்பத்தியாளா் பொதுப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும், ஆலைக் கிடங்கில் டெல்டாவில் உற்பத்தியாகும் நெல் மூட்டைகளை அடுக்கிவைக்க ஏற்பாடு செய்வதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அது தற்காலிக ஏற்பாடா என்பதையும், விவசாயிகள் கரும்பை உற்பத்தி செய்தால் அதை கொள்முதல் செய்வதாக ஆலை நிா்வாகமோ அல்லது தமிழக அரசோ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, அக்கட்சியின் மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன், நிா்வாகிகள் பெருவழுதி, ஆனந்தன், கனிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை தொடா்புடைய துறைகளுக்கான கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை விவசாய பிரதிநிதிகள் பேசினா். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனா்.

வேளாண் இணை இயக்குநா் சேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT