மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். அவரிடம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 25-ம், வேலைவாய்ப்பு கோரி 32-ம், முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 15-ம், புகாா் தொடா்பான மனுக்கள் 25-ம், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 10-ம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி 38-ம் என மொத்தம் 145 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.