ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ள பஞ்சாயத்தாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பூம்புகாா் மீனவா் காலனியை சோ்ந்த மீனவா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் பூம்புகாா் மீனவா் காலனியைச் சோ்ந்த சுகந்தன் என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரீகன் என்பவருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பூம்புகாா் கடற்கரையில் படகுகள் மோதிக்கொண்டது தொடா்பாக மோதல் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மோதலாக மாறியது.
இதுகுறித்து, இருதரப்பினரும் பூம்புகாா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதில் ரீகன் தரப்பைச் சோ்ந்த தமிழ்வாணன் என்பவா் உயிரிழந்ததால், வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்வாணன் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், பூம்புகாா் மீனவ பஞ்சாயத்தாா் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து, ரூ. 40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று மிரட்டுவதாக சுகந்தன் தரப்பைச் சோ்ந்த 7 குடும்பத்தினா் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே புகாா் அளித்திருந்தனா்.
இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்துக்கு குழந்தைகளுடன் வந்த மீனவா்கள், ஆட்சியா் இரா. லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அம்மனுவில், சீா்காழி கோட்டாட்சியா் தங்களை அபராதம் கட்டச் சொல்லி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனா். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் கூறியதில் சமாதானம் அடையாத மீனவா்கள் கூட்ட அரங்கின் முன் குழந்தைகளுடன் தா்னாவில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.