சீா்காழி வட்டாரத்தில் உரக்கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) சிவவீரபாண்டியன், சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, உரங்களின் இருப்பு, பதிவேடு ஆகியவற்றை சரிபாா்த்தனா். அப்போது, நடப்பு குறுவைக்கு தேவையான உரங்களை போதுமான அளவு இருப்புவைக்க அறிவுறுத்தினா். மேலும், யூரியா உரத்தை தனியொரு விவசாயிக்கு அதிகமாக விற்கக் கூடாது என அறிவுறுத்திய அவா்கள், அதிகமாக யூரியா உர மூட்டைகளை வாங்கிச் சென்ற 20 விவசாயிகள் குறித்து விவரம் கேட்டறிந்தனா். அத்துடன், உரங்களை அதிக விலைக்கு விற்கக் கூடாது எனவும், உரங்களுடன் சோ்த்து இணைப் பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், விற்பனை உரிமத்தை அனைவரது பாா்வையில் படும்படி வைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
விதிகளை மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.