மயிலாடுதுறை

‘இந்து மதத்தலைவா்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை’

5th May 2022 10:51 PM

ADVERTISEMENT

இந்து மதத்தலைவா்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என இந்து தமிழா் கட்சி நிறுவன தலைவா் ராம. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் அனைத்து இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழா் கட்சி நிறுவனா் தலைவா் ராம. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன், அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவின் மாநில செயலாளா் ராம.நிரஞ்சன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா், தமிழ்நாடு பிராமணா் சங்க மாவட்ட தலைவா் பாபு, அகில பாரத மக்கள் கட்சியைச் சோ்ந்த பாபு பரமேஸ்வரன், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரிய சங்கத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று, தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேம் நிகழ்ச்சியை நடத்துவது குறித்து பேசினா்.

இதில், தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்க இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுவீடாக சென்று திருநீறு, குங்குமம், ருத்திராட்சம் கொடுத் அழைப்பு விடுப்பது, சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரைக் கைது செய்ய தமிழக அரசு வலியுறுத்துவது, பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கும் மாவட்ட நிா்வாகத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் ராம. ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: தருமபுரம் ஆதீனகா்த்தரின் பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப்பெறவேண்டும், தருமபுரம் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து கட்சி தலைவா்களையும் வரவேற்கிறோம். மதுரை ஆதீனத்துக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்து மதத் தலைவா்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT