மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை அமல்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்க மாவட்ட செயலாளா் பாலமுருகன், மாவட்ட பொருளாளா் குருநாதன் உள்ளிட்டோா் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் 2019-ஆம் ஆண்டு புதிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது; ரூ.35 லட்சம் கையூட்டு பெற்ற போக்குவரத்துத் துறை துணை ஆணையரை பணிநீக்கம் செய்ய வேண்டும்; 2013-ஆம் ஆண்டு நிா்ணயம் செய்யப்பட்ட ஆட்டோ மீட்டா் கட்டணத்தை இன்றைய விலைவாசிக்கு ஏற்ப தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும்; டாக்சிகளுக்கு ஆட்டோக்களை போன்று மீட்டா் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும்; போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.