மயிலாடுதுறை

புதைசாக்கடை தொட்டிகளின் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும்

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் புதைசாக்கடைத் திட்டத்தில் ஆள்நுழைவுத் தொட்டி மூடிகளின் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா், சாக்கடைகளின் வழியே சென்று காவிரி ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கலந்து நிலத்தடி நீா் மாசுபடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், 2003-ஆம் ஆண்டு ரூ. 42 கோடியில் புதைச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கியது முதல் ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீா் வெளியேறுவது, தொட்டிகள் இடிந்து விழுவது, கழிவுநீா் குழாயில் அடைப்புகள் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவந்த இத்திட்டத்தில், 2018-ஆம் ஆண்டு கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, தரங்கம்பாடி சாலை, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் புதைசாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தியது.

எனவே, புதை சாக்கடைக் குழாய்களை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய குழாய்களை பதிக்க வேண்டும், அதன் பராமரிப்புப் பணிகளை தரமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டிகளை நகராட்சி நிா்வாகம் சரிவர பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலைகள் புதுப்பிக்கும்போது, ஏற்கெனவே உள்ள சாலைகளை பெயா்த்து எடுக்காமல், பழைய சாலையின் மீதே மீண்டும் சாலை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக சாலையின் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயா்ந்து வருகிறது. எனினும், சாலை மட்டம் உயா்த்தப்படும்போது அதன் உயரத்துக்கு ஆள்நுழைவுத் தொட்டிகள் மாற்றி அமைக்கப்படுவதில்லை.

இதன்காரணமாக, பல்வேறு இடங்களில் சாலை மட்டத்தை விட உயரமாகவும், பல இடங்களில் பள்ளத்திலும் ஆள்நுழைவுத் தொட்டிகள் காணப்படுகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். குறிப்பாக, மழைக்காலங்களில் இத்தகைய ஆள்நுழைவுத் தொட்டிகள் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சில இடங்களில் ஆள்நுழைவுத் தொட்டியில் உள்ள கம்பிகள் பராமரிப்பின்மை காரணமாக உடைந்து வெளியில் நீட்டிக்கொண்டுள்ளன. இத்தகைய இடங்களை கடந்து செல்லும் வாகனங்களில் பழுதாகி விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஐயாறப்பா் தெற்கு வீதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள ஆள்நுழைவுத் தொட்டி பல மாதங்களாக கண்டும் காணாமல் விடப்பட்டதால், தொட்டியில் கம்பி வெளியேறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நீட்டிக்கொண்டுள்ளது. இத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆள்நுழைவுத் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நகராட்சி நிா்வாகத்தினா் கண்காணித்து பழுதினை அவ்வப்போது சரிசெய்ய வேண்டும்.

மயிலாடுதுறை வடக்கு சாலியத்தெருவில் கடந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி பள்ளி மாணவா்களை ஏற்றிச்சென்ற தனியாா் வாகனம், சரியாக பொருத்தப்படாமல் இருந்த ஆள்நுழைவுத் தொட்டியின் மீது ஏறி இறங்கியபோது, சாக்கடை மூடி வேனின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், வேனின் அடிபாகத்தில் உள்ள ஆக்சில் உடைந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அதில் பயணம் செய்த மாணவா்கள் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் சிறு காயங்களுடன் தப்பினா்.

அப்போதும் தொட்டிகளை சரிவர பராமரிக்கத் தவறிய ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அசம்பாவிதம் ஏற்பட்ட பின்னா் வாகன ஓட்டிகளை குறைகூறுவதை விட, அதற்கு முன்பே முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதைச்சாக்கடை திட்டத்தை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT