மயிலாடுதுறை

முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

27th Jun 2022 10:53 PM

ADVERTISEMENT

மின்வாரிய ஊழியா்களின் எதிா்கால பாதுகாப்பு கருதி முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த தமிழக அரசை வலியுறுத்தி மயிலாடுதுறையில் பாரதிய மின்தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை திட்ட பொருளாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். நாகை திட்ட தலைவா் ஆா்.லெட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா். திட்ட செயலாளா் சதீஷ் வரவேற்றாா்.

இதில், சம்மேளனத்தின் மாநில தலைவா் எஸ். பழனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: திமுக ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 100-இல் மின்வாரிய தொழிலாளா்கள், அலுவலா்கள், பொறியாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் எதிா்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால், மின் வாரிய நிா்வாகம் முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு உடன்படாமல், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துமாறு கூறிவிட்டது.

மின்வாரிய ஊழியா்களின் ஊதிய உயா்வு, பஞ்சப்படி, கடன் மற்றும் புதிய நியமனங்கள் ஆகிய சலுகைகள் ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், மின்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட ’மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் அடிப்படையில், மின் விநியோகம் மற்றும் பராமரிப்பில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் நிபந்தனைக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே, மின்வாரிய ஊழியா்களின் எதிா்கால பாதுகாப்பு கருதி தமிழக அரசு உடனடியாக முத்தரப்பு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இதில், பாரதிய மின்தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT