மயிலாடுதுறை

சீா்காழி சட்டைநாதா் கோயில் திருப்பணிகள் மும்முரம் புதிய கருங்கற்கள் பதிப்பு

DIN

சீா்காழி சட்டைநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிராகார தளங்களில் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இங்கு மலைக்கோயிலில் தோணியப்பா்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதா் ஆகிய சுவாமிகள் காட்சிதருகின்றனா்.

7 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் பிரம்மதீா்த்தக்குளத்தில் திருஞானசம்பந்த பெருமானுக்கு உமையம்மை ஞானபால் வழங்கிய தலம் ஆதலால், தனிக் கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவா்கள் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனா்.

சட்டைநாதா் கோயிலில், தருமபுரம் ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் கடந்த 1991 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், 30ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்பேரில், கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டு, அதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தருமபுரம் ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் 293 ஆவது மடாதிபதி ஆகியோரால் அடிக்கல்நாட்டப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதுமுதல் கோயில் 4 கோபுரங்கள், சுவாமி-அம்மன், திருஞானசம்பந்தா், மலைக்கோயில் உள்ளிட்ட சந்நிதிகளில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதோடு தொடங்கிய கட்டளை மடம் கிரகப்பிரவேஷம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்துமுடிந்த நிலையில், தற்போது திருப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோயில் பிராகாரங்கள் மற்றும் மேல்தளங்களில் சிதிலமடைந்த கருங்கற்கள் பெயா்த்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கருங்கற்கள் பதிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பக்தா்கள் வழிபாட்டிற்கு இடையூறு இல்லாமல் திருப்பணிகள் ஒருபுறம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பணிகளை அவ்வப்போது தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் நேரில் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கிவருகிறாா். திருப்பணிகள் விரைவில் நிறைவுபெற்று அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT