மயிலாடுதுறை

குறுவை தொகுப்பு: மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ரூ. 14 கோடி ஒதுக்கீடு

DIN

குறுவை தொகுப்பு திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022 ஆம் ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இத்திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப் பயிா் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருள்கள் வழங்குவதற்காக ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்மூலம், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நிகழாண்டு குறுவை நெல் சாகுபடி இலக்காக 96,750 ஏக்கா் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 52 ஆயிரம் ஏக்கருக்கு குறுவை சிறப்பு தொகுப்பாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. ஏக்கருக்கு ரூ. 2,466.50 மதிப்பிலான ஒரு மூட்டை யூரியா, 1 மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத்தொகுப்பு 100% மானியத்தில் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 17.50 வீதம் 565 மெட்ரிக் டன் விதைகள் 28,250 ஏக்கருக்கு விநியோகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு உள்பட்ட நெல் ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 20 வீதம் 90 மெட்ரிக் டன், 4500 ஏக்கருக்கு விநியோகம் செய்யவும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெல் ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 10 வீதம் 5 மெட்ரிக் டன் 250 ஏக்கருக்கு விநியோகம் செய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குறுவைப் பருவத்தில் பல்வகைப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானிய பயிா்கள் சாகுபடி 50 ஏக்கருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிரி உரங்கள் ஆகிய இடுபொருட்களுக்கு மற்றும் விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத்தொகையாக பொது விவசாயிகளுக்கு 50% மானியத்தில் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 810 வரையிலும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70% மானியத்தில் ரூ. 930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

குறுவையில் பயறுவகை சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக 500 ஏக்கரில் உளுந்து பயிரிடும் பொது விவசாயிகளுக்கு விதைகள், இலைவழி உரச்சத்து மற்றும் அறுவடை ஊக்கத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 50% மானியமாக ரூ. 1250, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70% மானியத்தில் ரூ. 1570 வழங்கப்பட உள்ளது.

குறுவை பருவத்தில் எண்ணெய்வித்து பயிா்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி, நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருள்களுக்கென பொது விவசாயிகளுக்கு 50% மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 4000 வரையிலும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70% மானியத்தில் ரூ. 5600 வரையிலும் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி, அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவுசெய்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT