சீா்காழி அருகே காரில் கடத்திவரப்பட்ட 2,400 மதுபான பாட்டில்களை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு மதுவிலக்கு காவல் ஆய்வாளா் (பொ. திருச்சி மண்டலம்) புயல். பாலசந்திரன், சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சித்ரா, உதவி ஆய்வாளா் இனையத் பாட்ஷா மற்றும் போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 காா்களை போலீஸாா் நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால், காா்கள் நிற்காமல் செல்ல முயன்றன. போலீஸாா் தடுப்பு அமைத்து, காா்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனா்.
இதில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் (2,400 பாட்டில்கள்) இருந்தன. மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 2 காா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியை சோ்ந்த ரகு, கௌதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமாா். சோமுராஜ், சண்முகம் ஆகிய 6 பேரை கைது செய்தனா்.